ஒரு பேலியோ ஆலோசகரின் குறிப்புக்கள்- 47 / அலோபதி மருத்துவம் சர்க்கரை நோயை ஏன் குணப்படுத்துவதில்லை ?

அலோபதி (ஆங்கில) மருத்துவம் சர்க்கரை நோயை ஏன் குணப்படுத்துவதில்லை ?

ஆங்கில மருத்துவ சிகிச்சை முறை சர்க்கரை நோயைக் குணப்படுத்துவது இல்லை. மேலும், சர்க்கரை நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தி, சர்க்கரை நோயாளர்களை விரைவில் சாவை நோக்கித் தள்ளுகிறது. ஏன் ?

டைப்-2 சர்க்கரை நோயாளர்கள், பெரும்பாலும் (95%) பேர் ஆங்கில மருத்துவத்தின்               (ALLOPATHY MEDICINE) மூலம், சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள்.

American Diabetes Association-ன் பரிந்துரைப்படி, சர்க்கரை நோய் இல்லாத ஒருவருக்கு, இவர்களின் ஃபாஸ்டிங் ரத்த சர்க்கரை அளவு 100 mg/dL-க்கு கீழேயும், 2 மணி நேரம் கழித்து, எடுக்கப்படும் Post Prandial சர்க்கரை அளவு 140 mg/dL-க்கு கீழேயும் இருக்க வேண்டும்.

நான், பேலியோ உணவு முறை ஆலோசகராக, இது வரை ஆங்கில மருந்துகளை மூலம் சிகிச்சை எடுக்கும்,  3000-க்கும் மேற்பட்ட டைப்-2 சர்க்கரை நோயாளர்களின், ரத்தப் பரிசோதனை ரிப்போர்டுகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால், சர்க்கரை நோய் என்னும் பிணிக்காக மருந்து உட்கொள்ளும் இவர்களின் ஃபாஸ்டிங் ரத்த சர்க்கரை  அளவு 100 mg/dl -க்கு குறைவாக ஒரு போதும் இருந்ததில்லை. உணவு உண்டு, 2 மணி நேரம் கழித்து, எடுக்கப்படும் Post Prandial சர்க்கரை அளவு 140 mg/dL-க்கு கீழே இருந்ததில்லை.

வைரல் காய்ச்சலால் அவதியுறும் நோயாளி  ஒருவர், ஆங்கில மருத்துவரிடம் செல்கிறார். அவர், ஆன்டி-பயோடிக்ஸ் எனப்படும், வைரஸ் கிருமிகளை அழிக்கவல்ல ஆங்கில மருந்து பரிந்துரைக்கிறார்.  நோயாளி அதை உட்கொண்டு, அதிக பட்சம் ஒரு வாரத்திற்குள், வைரஸ்கள் உடலிலிருந்து நீக்கப்பட்டு, நோயிலிருந்து முழு நிவாரணம் பெறுகிறார்.

ஆனால், சர்க்கரை நோயாளர், ஆங்கில மருந்து உட்கொண்ட பின்னரும், ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வருவதில்லை. உண்மையில், சில மாதங்களில் ரத்த சர்க்கரை அளவு மேலும் உயர்கிறது. மருத்துவர், மருந்துகளின் வீரியத்தை அதிகப்படுத்துகிறார். கூடுதலாக, சில மருந்து வகைகளைப் பரிந்துரை செய்கிறார். ஒரு வேளைக்கு 1 மாத்திரை எடுத்துக் கொண்டிருந்த சர்க்கரை நோயாளர்,  இப்போது, அதிக வீரியம் கொண்ட 4  வகை மாத்திரைகளை எடுக்கிறார். சில வருடங்களில், ரத்த சர்க்கரை மேலும் மேலும் உயர, மாத்திரைகள் வேலை செய்யாமல் போக, மருத்துவர், இன்சுலின் மருந்து,  ஊசி மூலம் போடச்  சொல்கிறார். இன்னும் சில வருடங்களில், இன்சுலின் மருந்தின் அளவு,  ஒரு வேளைக்கு 5 யூனிட்டிலிருந்து, 2௦ / 30  யூனிட் எடுக்கும் அளவுக்கு உயர்கிறது. நாளின், 3 வேளைகளும் இன்சுலின் மருந்து எடுக்கும் கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால், ரத்த சர்க்கரை அளவு எப்போதும், அதிகமாகவே இருக்கிறது, குறைவதேயில்லை.

 

சர்க்கரை நோயாளர்கள், இவ்வளவு ஆங்கில மருந்துகள் / இன்சுலின் எடுத்துக் கொண்ட பின்னும், ஏன் சர்க்கரை நோய் குணமாகவில்லை ?

ஏனெனில், சர்க்கரை நோய்க்கான ஆங்கில மருத்துவத்தின் சிகிச்சை முறை, இரண்டு மிகப்பெரிய பொய்களின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்   கனடிய நாட்டைச் சேர்ந்த, சிறுநீரக நோய்களின் சிறப்பு மருத்துவர். ஜேசன் ஃபங் (Jason Fung, Nephrologist from Canada).

பொய் நம்பர் 1 : TYPE 2 Diabetes is a chronic, Progressive Disease. டயபடீஸ் டைப்-2 நீண்ட நாட்கள் நீடித்து, நோயின் தீவிரம் மேலும் மேலும் அதிகரித்து,  மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு நோய்.

இதை, மிக எளிதாக பொய் என்று நிரூபிக்க முடியும் என்கிறார் மரு. ஜேசன்.

ஆதாரம் 1 : மிக அதிகமான உடல் எடை உள்ளவர்கள், உடல் எடை குறைப்புக்காக  Bariatric surgery எனப்படும், இரைப்பை அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். அதாவது, இவர்களின் இரைப்பை ஒரு பகுதி  வெட்டி எடுக்கப்படுவதன் மூலம் அதன் அளவு குறைக்கப்படும். அல்லது இரைப்பையை மடித்துத் தைக்கப்படுவதன் மூலம், அதன் அளவு சிறிதாக்கப்படும். இந்த அறுவை சிகிச்சை செய்த பின், இவர்களால் அதிக உணவு உட்கொள்ள முடியாது. எனவே, உண்ணும் உணவின் கலோரி அளவுகள் குறைந்து, உடல் எடை தானாகவே குறையும். டயபடீஸ் டைப்-2 உள்ளவர்கள், இந்த இரைப்பை அறுவை சிகிச்சை செய்த பின், 4  வாரங்களில், எடை குறைவதற்கு முன்பே, ரத்த சர்க்கரை அளவு வெகுவாகக் குறைந்து, இவர்களின் சர்க்கரை நோய் முழுதும் குணமாகி விடுகிறது என்று 2012-ல் New England of Medicine வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆதாரம்  2 : மருத்துவர் ஜேசன் ஃபங் அவர்களின் மார்கரெட் என்னும் நோயாளி, 27 வருடங்களாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர். இவர், ஒரு நாளில், இன்சுலின் 120  யூனிட் +  கூடவே 2 கிராம் மெட்ஃபார்மின் மாத்திரை எடுத்துக் கொண்டிருந்தார். இவரின்    HbA1c-7% . இவரை, இடைவெளி விட்ட விரதத்தை (Intermittent  Fasting) கடைப்பிடிக்கச் செய்து,  4 வாரங்களில், இன்சுலின் +  மெட்ஃபார்மின் மாத்திரை எடுப்பது முழுதும் நிறுத்தப்பட்டது. இவரது,  HbA1c அளவு  6.6% -க்கு குறைந்தது. இவர், ஒரு வருடத்தில் 30 கிலோ எடை குறைத்தார். இவரது, HbA1c ஒரு வருடத்தில் 6.2% அளவுக்கு இறங்கி விட்டது.

 

ஆதாரம்  3 :

27 வயதான இளைஞர் ஒருவர். இவரும் மரு. ஜேசன் அவர்களிடம் சிகிச்சைக்காக வந்தவர். புதிதாக சர்க்கரை நோய் இருப்பதை, சமீபத்தில் தெரிந்து கொண்டவர். இவரது HbA1c-10.4 %. இவரை, வேறு ஒரு மருத்துவர்,  3 வகையான ஆங்கில மருந்துகளை எடுக்கச் சொன்னார். இவர் அவற்றை எடுக்க மறுத்து விட்டு, மரு. ஜேசன் சொன்னது படி, குறை மாவு-நிறை கொழுப்பு (பேலியோ) உணவு முறையை கடைபிடித்து, 1௦ கிலோ எடை குறைத்தார். சில மாதங்களில், இவரது HbA1c-5.5% அளவுக்கு குறைந்து விட்டது. சர்க்கரை நோய் முழுதும் விலகி விட்டது.

 

மேலே சொன்ன 3 ஆதாரங்களில், நீங்கள் ஒன்றை தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். இரைப்பை அறுவை சிகிச்சை செய்த போது, இடை வெளி விட்ட விரதம் இருந்த போது, குறை மாவு-நிறை கொழுப்பு (LCHF/Paleo) உணவு முறையைக் கடைப்பிடித்த போது,  டயபடீஸ் டைப்-2 முழுதும் குணமடைந்தது. இவை அனைத்தும், சர்க்கரை நோயை முழுதும் குணப்படுத்த சிகிச்சை முறையாகப் பயன்படுத்த முடியும்.

 

ஆனால், சர்க்கரை நோய் மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை முறை என்ன ?

  1. செல்களின் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க மருந்துகள் / கணைய பீட்டா செல்கள், அதிக இன்சுலின் சுரக்க மருந்துகள்

(Metformin / Sulfonylureas / Meglitinides / Glucagon-like peptide-1 (GLP-1) receptor agonists such as exenatide  and liratuglide , SGLT2 inhibitors, canagliflozin, and dapaglifozin, Dipeptidyl peptidase-4 (DPP-4) inhibitors such as sitagliptin , linagliptin and saxagliptin .

 

  1. இன்சுலின் ஊசி மூலம் உடலுக்குள் செலுத்துவது. (Insulin Inj)

 

  1. குறைவான கொழுப்புள்ள உணவுகளை எடுப்பது (Low fat diet)

 

மருந்துகள் எடுத்து, இன்சுலின் ஊசி தினமும் போட்டு, குறை கொழுப்பு உணவுகள் எடுத்து, சில வாரங்கள் / மாதங்களில், ரத்த சர்க்கரை அளவு குறைந்து,   சர்க்கரை நோய் முழுதும் குணமாகி விட்டது,  மருந்துகள் / இன்சுலின் ஊசி போடுவதை நிறுத்தி விட்டோம் என்று யாராவது சர்க்கரை நோயாளி சொல்லி நீங்கள் கேட்டதுண்டா ? இருக்காது. ஏனெனில், இவை மூன்றும்  சர்க்கரை நோயைக் குணப்படுத்துவது இல்லை.

 

உண்மை என்ன? சர்க்கரை நோய் குணப்படுத்தக்கூடிய, உணவு சார்ந்த நோய் என்பதே !

உணவு சார்ந்த, உண்ணும் உணவினால் வரும் ஒரு நோயை, மாத்திரை மருந்துகளால் குணப்படுத்த முடியாது. உணவு முறை மாற்றத்தினால் மட்டுமே குணப்படுத்த முடியும்.

 

பொய் நம்பர் 2

Lowering Blood Sugar is the goal of treatment – ரத்த சர்க்கரையை குறைப்பதே, அலோபதி சிகிச்சை முறையின் நோக்கம்.

இதையும், மிக எளிதாக பொய் என்று நிரூபிக்க முடியும் என்கிறார் மரு. ஜேசன்.

டயபடீஸ் டைப்-1 & டைப்-2 இருப்பவர்களுக்கு, ரத்தத்தில் அதிக சர்க்கரை எப்போதும் இருக்கும். இது ஆக்சிஜனேற்ற அழுத்ததை உருவாக்குகிறது.  மேலும், Advance Glycation End Products (AEGs) என்றழைக்கப்படும், குளுகோஸ் / ஃபிரக்டோஸ் மூலக்கூறுகள்,  புரதங்கள் மற்றும் கொழுப்புகளுடன் இணைந்து,   சர்க்கரை பூச்சு பூசப்பட்டு  காணப்படுகின்றன. இதனால், உடல் நலனை சிதைக்கக் கூடிய இதய நோய்கள், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய், அல்சைமர் நோய் உருவாகின்றன. டயபடீஸ் முத்திப்போகும்போது, கண்கள், பாதங்கள், மூளை, சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகள் பெரிதும் பாதிப்படைகின்றன.

 

எனவே, தர்க்க ரீதியாகப் பார்க்கும்போது, அதிகமாக இருக்கும் ரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, சீரான அளவுக்கு கொண்டு வந்தால், மேலே சொன்ன நோய்கள் வராமல் தடுக்க முடியும். ஆனால், 2008-ல் New England Medical Journal வெளியிட்ட,  ACCORD எனப்படும் சோதனையின் முடிவுகள் இதைப் பொய்யென்று நிரூபித்தது. டயபடீஸ் டைப்-2 நோயாளர்கள்,  ஆயிரம் பேருக்கு, மருந்துகள் மூலம், ரத்த சர்க்கரை அதிகமாக ஏறாமல், கட்டுபாட்டுக்குள் வைக்கப்பட்டது. இருந்தாலும், அவர்களுக்கு, மேலே சொன்ன நோய்கள் வருவது தடுக்கப்பட முடியவில்லை. அவர்கள் இறப்பு சதவீதம் குறையவில்லை, அதிகரித்தது என்பது உண்மை.

 

ஒருவருக்கு தீமை விளைவிக்கும்  பாக்டீரியாக்களால் தொற்று(bacterial infection) ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். இதற்கு ஆங்கில மருத்துவ முறையில் எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று பார்ப்போம். இந்த தொற்று ஏற்படுவதற்கு மூல காரணம் (Root cause) பாக்டீரியாக்கள். இந்த தொற்றின் அறிகுறி “காய்ச்சல்” வருவது. இப்போது தொற்று வருவதற்கான  மூல காரணமான பாக்டீரியாக்கள் அழிக்கப்படவேண்டும். அதற்கு, நுண்ணுயிர்க்கொல்லிகள் என்றழைக்கப்படும் antibiotic மருந்தாகக் கொடுக்கப்படும். இந்த தொற்று ஏற்பட்டதன் அறிகுறியான, காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்தால், பாக்டீரியாக்கள் அழியாது. தொற்றும் சரியாகாது.

 

இதேபோல், டைப்-2 சர்க்கரை நோய் வருவதற்கு மூலகாரணம்(root cause), நம் உடல் செல்களின்  இன்சுலின் எதிர்ப்பு (Insulin Resistance) நிலை. டைப்-2 சர்க்கரை நோய் வந்ததன் அறிகுறி(Symptom), ரத்த சர்க்கரை அதிகம் இருப்பது(High Blood Sugar). ஆனால், அலோபதி மருத்துவ முறையில், மூலகாரணமான இன்சுலின் எதிர்ப்புக்கு சிகிச்சை கொடுக்காமல், அறிகுறியான, அதிக ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது.

.

ஒருவர் pre-diabetic எனத் தெரிந்துகொண்ட உடனே, மருத்துவர் Metformin மாத்திரை பரிந்துரை செய்வார். இது, உடல் செல்களின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, இன்சுலின் சொல்வதை கேட்க வைக்கிறது. கல்லீரல் உற்பத்தி செய்யும் சர்க்கரை அளவைக் குறைக்கக் செய்கிறது. இதனால், இந்த மாத்திரை எடுத்த சில மாதங்களுக்கு, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.  ஆனால், தொடர்ந்து அதிகப்படியான மாவுச்சத்து மிகுந்த உணவு உண்பதால், இன்சுலின் சுரப்பு அதிகரிக்கிறது. இதனால், இன்சுலின் எதிர்ப்பும் அதிகமாகிறது. நாளடைவில், செல்கள் இன்சுலின் சொல்வதை சுத்தமாகக் கேட்காது.

 

இப்போது, ரத்தத்தில் மீண்டும் அதிக அளவு சர்க்கரை காணப்படும்.  மருத்துவர், Metformin -உடன் இம்முறை gliptin அல்லது Sulfonylureas வகை மாத்திரைகள் சேர்த்து பரிந்துரை செய்வார். இம்மாத்திரைகள், கணைய பீட்டா செல்களைத் தூண்டி விட்டு, அதிகமான அளவு இன்சுலின் சுரக்கச் செய்கின்றன. இதனால், ரத்தத்தில் எப்போதும் அதிக இன்சுலின் இருக்கும். இது, இன்சுலின் எதிர்ப்பை மேலும் உயர்த்தும்.

 

சில மாதங்கள் / வருடங்களில், இந்த வகை மாத்திரைகளும் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்காது.  பின்னர், மருத்துவர் இன்சுலின் மருந்தை, ஊசி மூலம் உடலுக்குள் ஏற்றச் சொல்வார். ஒரு வேளைக்கு 5 யூனிட் என்று  ஆரம்பித்து, சில வருடங்களில்,  வேளைக்கு 30 / 40  யூனிட் வரை செல்லும். மேலும், மேலும் இன்சுலின் அளவை அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஏனெனில், இன்சுலின் எதிர்ப்பு அதிகமாக,  ரத்த சர்க்கரையின் அளவும் அதிகமாகிக் கொண்டுதானிருக்கும்.

 

ஒரு கட்டத்தில், ஒரு நாளில் 1௦௦ யூனிட் இன்சுலின் எடுக்கும் நிலைக்கு அவர் தள்ளப்படலாம். சர்க்கரை நோயால், நாளடைவில் அவரின் உடல் நிலை மிகவும் மோசமடையும்.  ஏனெனில், சர்க்கரை நோய்க்கு மூல காரணமான, இன்சுலின் எதிர்ப்புக்கு இங்கே, சிகிச்சை தரப்படவில்லை. மாறாக, சர்க்கரை நோயின் அறிகுறியான, அதிகப்படியான ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதற்காக மட்டுமே சிகிச்சை தரப்படுகிறது.

இப்போது நாம் மாவுச்சத்து மிகுந்த உணவு உண்ணும்போது, உடலில் நடக்கும் வளர்சிதை மாற்றம் என்ன என்பதைப் பார்ப்போம்.

நாம் சாதாரண உணவு முறையில்,  மாவுச்சத்து உள்ள  உணவு உண்ணும்போது, ரத்தத்தில் குளுகோஸ் வந்து சேர்கிறது.  கணையம் இன்சுலினை சுரந்து, ரத்தத்தில் சேர்க்கிறது. ரத்த இன்சுலின் அளவு உயர்கிறது. இன்சுலின், ரத்தத்தில் உள்ள குளுகோஸை, உடலின் லட்சக்கணக்கான செல்களுக்கு எடுத்துச் சென்று சேர்க்கிறது. செல்களின் தேவை பூர்த்தி செய்த பின் மீதமிருக்கும் குளுகோஸை கல்லீரல், கிளைகோஜனாக மாற்றி தன்னுள் சேமித்து வைக்கிறது. தான் சேமித்தது போக, ரத்தத்தில் இருக்கும் மீதமுள்ள குளுகோஸை, கல்லீரல், de novo lipogenesis என்னும் செயல் மூலம்,  ட்ரைகிளிசரைட் கொழுப்பாக மாற்றி அதையும் தன்னுள் சேமித்து வைக்கிறது.

 

நாம், உணவு உண்ணாத நிலையில் இருக்கும்போது, ரத்தத்தில் இன்சுலின் அளவு மிகக் குறைவாக இருக்கும். அப்போது, கல்லீரல் சேர்த்து வைத்திருக்கும் கிளைகோஜன் மற்றும் கொழுப்பு வெளியேற்றப்படும்.

 

ரத்தத்தில் இன்சுலின் அளவு மிக அதிகமாய் எப்போதும் இருக்கும்போது, கல்லீரலில் கொழுப்பு அதிகமாய் சேமிக்கப்பட்டு, Fatty Liver – அதாவது கொழுப்பு படிந்த கல்லீரலாகி விடுகிறது. ரத்தத்தில் இருக்கும், அதிகப்படியான இன்சுலின், கல்லீரலுக்குள் மேலும் மேலும் கொழுப்பை சேமிக்கத் தூண்டுகிறது.

அளவுக்கு மீறி காற்றடிக்கப்பட்ட பலூனுக்குள், மேலும் மேலும் காற்றை அடைக்க, ஒவ்வொரு முறையும் முயற்சி செய்யும்போது, ஊதப்பட்ட காற்று முழுதாய் சென்றடையாது. சிறிதளவே உள்ளே செல்லும். இதைப் போலவே, இன்சுலின் ஒவ்வொரு முறையும், அதிக கொழுப்பை கல்லீரலுக்குள் அடைக்க பெருமுயற்சி செய்தாலும், ஏற்கெனவே, கல்லீரலில் கொழுப்பு நிரம்பி வழிவதால், சிறிதளவே கொழுப்பே கல்லீரலுக்குள் சேரும். இன்சுலின் எதிர்ப்பே (Insulin Resistance) இதற்கு காரணம்.

கல்லீரலுக்கும் அடைக்கப்படும் கொழுப்பு மிகக் குறைவாக இருப்பதால், மேலும் மேலும் இன்சுலின் சுரந்து, இன்னும் அதிகமாக கொழுப்பை, கல்லீரலுக்கும் அடைக்க முயற்சி நடக்கிறது. இதனால், ரத்தத்தில் இன்சுலின் உயர்ந்து கொண்டே போகிறது. அது, கல்லீரலுக்குள் அதிக கொழுப்பை அடைக்கச் செய்து, பெரிய ஃபேட்டி லிவராக மாற்றுகிறது. இதனால், இன்சுலின் எதிர்ப்பு மேலும் அதிகமாகிறது. இது, அதிக இன்சுலின் தேவையை அதிகப்படுத்துகிறது. இவ்வாறு, ஒரு சுழற்சி பாதையில், இந்த 3 செயல்களும் மீண்டும், மீண்டும்,  நடந்து கொண்டே இருக்கின்றன.

நாம் எடுக்கும் அதிகப்படியான மாவுச்சத்து என்னவாகிறது ?

3 வழிகளில், மாவுச்சத்தைக் கையாளலாம்.

  1. மாவுச்சத்து சக்திக்காக எரிக்கப்படலாம். ஆனால், நாம் உண்ட நிலையில் ரத்தத்தில் இன்சுலின் அளவு எப்போதும் அதிகமாக இருக்கும். இது, கல்லீரலை மாவுச்சத்தை கொழுப்பாக மாற்றி சேமிக்கத் தூண்டும். எனவே, மாவுச்சத்தை எரித்து, சக்தியாகப் பயன்படுத்தும் சாத்தியம் இல்லை.
  2. மாவுச்சத்தை கல்லீரலில் கிளைகொஜனாகவோ அல்லது de novo lipogenesis மூலமாக, கொழுப்பாக மாற்றி, கல்லீரலுக்குள்ளேயே சேமித்து வைக்கலாம். ஏற்கெனவே, கல்லீரல், மிகப்பெரிய கொழுப்பு பந்தாக மாறிவிட்ட நிலையில், தன்னுள்ளே சேமித்து வைக்கும் சாத்தியம் இல்லை.
  3. De novo lipogenesis மூலமாக, கொழுப்பாக மாற்றி, கல்லீரலுக்கு வெளியே தள்ளலாம். இது தான் நடக்கிறது. இவ்வாறு, கல்லீரல், குளுகோசை கொழுப்பாக மாற்றி வெளியே தள்ளும் போது, அது, கணையத்தின் உள்ளேயும், சுற்றியும் படிந்து, Fatty Pancreas எனப்படும் கொழுப்பு படிந்த கணையத்தை உருவாக்குகிறது.

 

இங்கிலாந்தை சேர்ந்த மரு. டைலர், “Counter Point Study” என்ற ஆய்வு முடிவுகளை 2011-ல் வெளியிட்டார். இந்த ஆய்வில், இவர் டைப்-2 டயபடீஸ் உள்ள நோயாளர்களுக்கு, கலோரி குறைந்த (500 கலோரிகள் / நாளொன்றுக்கு)  உணவினை உண்ணக் கொடுத்து, அவர்களின் ரத்த சர்க்கரை அளவுகளை ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிந்தார். டைப்-2 டயபடீஸ் இருந்த ஒருவரின், ரத்த சர்க்கரை அளவு 9.6 mmol/L – லிருந்து, 5.6 mmol/ L ஆக, 7 நாட்களில் குறைந்தது. கல்லீரலின் இன்சுலின் எதிர்ப்பு (Hepatic Insulin Resistance) குறைந்தது. கல்லீரலின் இன்சுலின் உணர்திறன் (Hepatic Insulin Sensitivity) மேம்பட்டது. கல்லீரலில் நிரம்பியிருந்த கொழுப்பு 3௦ % அளவுக்கு குறைந்தது. கணையத்திலிருக்கும் கொழுப்பும் கரைந்தது. ஆனால், கல்லீரல் கொழுப்பு எளிதில், விரைவாகக் கரைந்தது. கணைய கொழுப்பு சிறிது தாமதமாகவே குறைந்தது. கணையத்தில் அதிகமாக கொழுப்பு படிந்ததால், செயல் திறன் குறைந்த பீட்டா செல்கள், இப்போது கொழுப்பு கரைந்ததால், மீண்டும் செயல்படத் துவங்கின.

 

டைப்-2 டயபடீஸ் வருவதற்கு இரண்டு காரணங்கள்.

 

  1. உடல் பருமனால், கணையத்தில், அதிக கொழுப்பு படிந்து, கணையத்தின் பீட்டா செல்கள் செயல்திறன் இழப்பதால், தேவையை விடக் குறைவாக இன்சுலின் சுரப்பது அல்லது இன்சுலின் சுரக்காமலே போவது.
  2. இன்சுலின் எதிர்ப்பு

 

“Counter Point Study” என்ற ஆய்வில், மிகக் குறைவான கலோரி உள்ள உணவு உண்ட போது, கணைய பீட்டா செல்களின், செயல் திறன் மேம்பட்டு, இன்சுலின் சுரப்பு அதிகமானது. இன்சுலின் எதிர்ப்பும் வெகுவாகக் குறைந்தது.

இதை, மேலே உள்ள “இரட்டை சுழற்சி கோட்பாடு “ மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

முதல் சுழற்சி : அதிகப்படியான மாவுச்சத்து உண்ணும்போது, ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிக்கிறது. அது, கொழுப்பு படிந்த கல்லீரலை (FATTY LIVER) உருவாக்குகிறது. அதனால், கல்லீரலின் இன்சுலின் எதிர்ப்பு அதிகமாகிறது. இது, இன்சுலின் அளவை மேலும் அதிகப்படுத்துகிறது. இன்சுலின் எதிர்ப்பு அத்தி தீவிரமடைகிறது. சுழற்சி முறையில், இச்செயல்கள் மேலும் மேலும் நடக்கிறது.

 

இரண்டாம் சுழற்சி : அதிகப்படியான மாவுச்சத்து உண்ணும்போது, ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிக்கிறது. அது, கொழுப்பு படிந்த கல்லீரலை (FATTY LIVER) உருவாக்குகிறது. கல்லீரல், de novo lipogenesis மூலம், குளுகோசை கொழுப்பாக மாற்றி வெளியே அனுப்புகிறது. இந்த கொழுப்பு, கணையத்தில் படிந்து, Fatty Pancreas உருவாகிறது. அதிக கொழுப்பு படிவதால், கணையத்தின் பீட்டா செல்களின் செயல் திறன் குறைந்து, நாளடைவில் செயலிழக்கின்றன. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது, இன்சுலின் தேவையை அதிகரிக்கிறது. சுழற்சி முறையில், இது மேலும் மேலும் நடக்கிறது.

 

இந்த, இரட்டை சுழற்சி கோட்பாட்டில், மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, அதிகப்படியான மாவுச்சத்து உண்பதால், ரத்தத்தில் உயரும் அதிகப்படியான இன்சுலின் அளவு. இதை, சிகிச்சை மூலம் சரி செய்யா விட்டால்,  டைப்-2 டயபடீஸ் தீவிரமடைந்து நாளடைவில், சிறுநீரக செயலிழப்பு, இதய நோய்கள் என பல நோய்களை கொண்டு வரும் அபாயமுண்டு.

 

டைப்-2 டயபடீஸ் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் மட்டுமல்ல, உடலில் எல்லா பகுதிகளிலும், மிக அதிக அளவில்  சர்க்கரை உள்ளது. அலோபதி (ஆங்கில) மருத்துவ சிகிச்சை முறையில், ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரையை, உடலில் வேறு பகுதிகளுக்கு அனுப்புவதன் மூலம், ரத்த சர்க்கரை அளவு குறைக்கப்படுகிறது.

 

நம் உடலை, சர்க்கரை  கோப்பை (SUGAR BOWL) என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.  நாம், அதிகப்படியாக மாவுச்சத்து உணவுகளை உண்ண உண்ண , சர்க்கரை கோப்பைக்குள் (நம் உடலுக்குள்) சர்க்கரை சேர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு நிலையில் சர்க்கரை கோப்பை, முழுதும் நிரம்பி, வழியும் சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது. இவ்வாறு, ரத்தத்தில் சேரும் சர்க்கரை வெளியேற்றப்பட வேண்டும். ஆனால், அலோபதி மருத்துவ சிகிச்சை முறைப்படி, நாம் இந்த சர்க்கரையை, உடலின் செல்களுக்குள் மீண்டும் கொண்டு சேர்க்க, அதிகப்படியாக இன்சுலின் எடுக்கிறோம்.  இந்த இன்சுலின், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை, திடீர் அழுத்தம் கொடுத்து, வெளியேற்றி, கல்லீரலுக்கு அனுப்பி, கொழுப்பாக மாற்றி,  இதயம், கண்கள்,  சிறுநீரகம், கால்கள் என்று உடலின் பல பாகங்களுக்கு அனுப்புகிறது.

 

அடுத்த வேளை, நாம் மாவுச்சத்து மிகுந்த உணவு உண்ணும் போது, மீண்டும் சர்க்கரை கோப்பை நிரம்பி வழிந்து, அதிக இன்சுலின் ரத்தத்தில் சேர்க்கப்பட்டு, சர்க்கரை கொழுப்பாக மாற்றப்பட்டு, உடலின் பல உறுப்புகள் / அவற்றின் செல்களுக்கு அனுப்பப்படுகிறது.

 

எனவே, அலோபதி மருத்துவத்தில், ரத்த சர்க்கரை உடலிலிருந்து வெளியேற்றப்படவில்லை.  மாறாக, உடலுக்குள்ளேயே வெவ்வேறு இடங்களில் கொழுப்பாக சேமித்து வைக்கப்படுகிறது. நாளடைவில், நம் உடல் உறுப்புகள் பழுதடையத் துவங்குகின்றன. கண் பார்வை மங்குகிறது அல்லது பறிபோகிறது. மாரடைப்பு ஏற்படுகிறது. கால்கள் அழுகி, வெட்டி எடுக்கப்படுகிறது. சிறுநீரகம் செயலிழக்கிறது. வாழ்வின் இறுதி காலகட்டத்துக்கு தள்ளப்படுகிறோம்.

 

அப்போது, சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் சொல்லுவார் : “நான் ஏற்கெனவே சொன்னேனல்லவா ! சர்க்கரை நோய், நாள்பட்டு நீடிக்கக் கூடிய (chronic) , மேலும் மேலும் மேலும் நோயின் தீவிரம் (Progressive disease) அதிகரிக்குமென்று…அது தான் இப்போது நடந்திருக்கிறது. சர்க்கரை நோய் மிகக் கொடிய நோய். இருந்தாலும், இதை சரி செய்து, குணமாக்க என்னாலான உதவியைச் செய்வேன்”.

 

ஆனால், இவ்வளவு உடல் பிரச்சினைகளும் ஏற்படக் காரணம், அலோபதி மருத்துவத்தின் தவறான சிகிச்சை முறையாகும்.

 

நம், சமையலறையில் சேரும் குப்பையை, வெளியே எறிவதற்குப் பதிலாக, தரை விரிப்புக்கு கீழே மறைத்து வைத்து விட்டு, “பாருங்கள், என் சமையலறை எவ்வளவு சுத்தமாக இருக்கிறது” என்று சொல்கிறோம். மேலும், மேலும்  குப்பை சேரும்போது, வீட்டில் வேறு ஒரு இடத்தில் உள்ள தரை விரிப்புக்கு கீழே சேர்த்து வைக்கிறோம். இதனால், வீடே நாற்றமடிக்கும் சூழல் உருவாகும். ஆனால், நமக்கு எங்கிருந்து நாற்றம் வருகிறதென்று தெரியாது. இது தான், டைப்-2 டயபடீஸ் நோய்க்கு, அலோபதி (ஆங்கில) மருத்துவ முறைப்படி, சிகிச்சை அளிக்கும்போது,  நடக்கிறது.

 

மேலும், மரு. ஜேசன் சொல்கிறார்-மதுப்பழக்கத்துக்கு அடிமையான ஒருவர், அதிலிருந்து மீண்டுவர, மதுவையே குடிக்கச் செய்தால், அவர் எப்படி குணமடைய முடியும். இதைப் போலத்தான், ஆங்கில மருத்துவ முறையில், சரக்கரை நோய்க்கு, இன்சுலினை குறைக்காமல், மேலும் மேலும் இன்சுலின் அளவை அதிகப்படுத்துவது, சர்க்கரை நோயை தீவிரப்படுத்தி, உடல் நிலையை மேலும் மோசமடையச் செய்யும்.

 

ஆனால், டைப்-2 டயபடீஸ் நோய், நாம் உண்ணும் உணவு முறையை மாற்றி அமைப்பதன் மூலம் முழுதாய் குணப்படுத்தக் கூடிய நோய் என்பதே உண்மை. ஆங்கில மருத்துவ சிகிச்சை முறையில் கொடுக்கப்படும் மருந்து / மாத்திரைகள் / இன்சுலின் ஊசி மூலம் ஏற்றுவதன் மூலம் குணப்படுத்த முடியாது.

 

இப்போது புரிகிறதா ? ஆங்கில மருத்துவ சிகிச்சை முறை, சர்க்கரை நோயைக் குணப்படுத்துவது இல்லை. மாறாக, சர்க்கரை நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தி, சர்க்கரை நோயாளர்களை விரைவில் சாவை நோக்கித் தள்ளுகிறது.

**********************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *